Monday, August 27, 2012

வரம்பு மீறல்கள்.... ஒரு பார்வை...!


சமூகத்தில் சீரான வாழ்க்கை முறையை உறுதி செய்வதற்காகத் தான் விதிகளும் வரம்புகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன.கட்டுப்பாடுகளற்ற ஓர் சமூக அமைப்பில் அமைதியான சூழ்நிலையினை எதிர்பார்க்க முடியாது.நாகரீகம் வளர்ந்துள்ளதாக நம்பப்படும் நாடுகளில் "வரம்புகளே இல்லை... எமக்கு வானமே எல்லை...." என்று குடி,கூத்து,கும்மாளம் என்பதாக திரிபவர்களின் வாழ்க்கை பின்னணியை சற்று ஆராய்ந்து பார்த்தால்.. நமக்கு ஒரு உண்மை புலப்படும்.இத்தகையோரின் பிறப்பே வரம்புகளற்ற உறவுகளில் தான் அமைந்திருக்கும்.

வரம்பு மீறல்களின் வரலாறு ஆதி மனிதர் ஆதம்(அலை)
அவர்களிலிருந்து தொடங்குகிறது.இது பற்றி திருக்குர்ஆனில்....
மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம்.இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்.....(அத்தியாயம்:2,வசனம்:35,36)

இதனால் தான் என்னவோ... வரம்பு மீறலென்பது மனித வரலாற்றில் முற்றுப்பெறாத அத்தியாயமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சிறுநீர் கழிக்காதே என்பதாக எழுதப்பட்டிருக்கும் சுவர்களில் தான் நம்மவர்கள் "மூத்திரத்தால் சித்திரம் வரைவர்..!" எச்சில் துப்பாதீர் என்று எழுதப்பட்டிருக்கும் இடங்களுக்கு தான் நம்மவர்கள் "வெற்றிலை பாக்கு,பான்பராக் எச்சில்களால் வர்ணங்கள் பூசுவர்...!"இத்தகைய வரம்பு மீறல்கள் நமது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நிறைந்து காணப்படுகின்றன.

வளர்ச்சியடைந்ததாக நம்பப்படும் நாடுகளில் பொது இடங்களில் எச்சில் துப்புவது,சிறுநீர் கழிப்பது போன்ற செயல்கள் இல்லாவிட்டாலும்,போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது,அடுத்தவர்கள் உரிமைகளில் சர்வசாதாரணமாக தலையிடுவது,பொது இடங்களில் அணிந்தும் அம்மணமாக திரிவது போன்ற அவர்களின் வளர்ச்சிக்கு(?)தகுந்த மாதிரியான வரம்பு மீறல்கள் நடைபெற்று வருகின்றன.

மது பானங்களை விற்பனை செய்து கொண்டே.. குடி குடியை கெடுக்கும் என்பதாக பிரச்சாரம் ஒருபுறம்...! சினிமா,கலை என்ற பெயரில் விழிகளில் திணிக்கப்படும் விபச்சாரம் மறுபுறம்...! இந்த ரீதியில் அரசாங்கங்களே விதிகளை மீறும் போது,"குடி'களின் வரம்பு மீறல்களை தடுக்க முடியாது.

மீறப்படும் வரம்புகளுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டுமென்ற இறையச்ச உணர்வு ஒன்று மட்டுமே சமூகத்தை வரம்புகளுக்குட்பட்டு வழிநடத்தும்.

- கொள்ளுமேடு ரிஃபாயி..

No comments:

Post a Comment