Tuesday, February 19, 2013

தேனீக்கள் போதித்த பாடம்....

முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் திருட்டு சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. நம் தளங்களிலிருந்து திரட்டிய தகவல்களை.. அவற்றை தாம் ஆய்வு செய்து பதிந்தது போல வெளியிடக் கூடி பலரின் செயல்களைக் கண்டு சில நேரங்களில் ஏன் இந்த மாதிரி செய்கிறார்கள்..? என்று நினைத்ததுண்டு.

இன்றிலிருந்து அந்த மாதிரியான எண்ணங்களுக்கு என் மனதிலிருந்து விடை கொடுக்க வேண்டும் என்று எனக்குள் தீர்மானித்துள்ளேன்.
ஏன் என்னுள் இந்த மனமாற்றம்.?

இன்று காலை தொழுகைக்கு பின் என் வீட்டின் மொட்டை மாடியில்,தோட்டத்திலிருந்து நெடு நெடுவென வளர்ச்சி பெற்று மாடியின் பின் புறத்தில் அழகான பந்தலைப் போல கிளைப் பரப்பியிருக்கும் தென்னை,மா மரங்களின் நிழலில் அமர்ந்து எனது சிந்தை கவர்ந்த காரைக்கால் எஃப்.எம்.ரேடியோவை கேட்க தொடங்கினேன்.

நீண்ட நாள்களுக்கு பிறகு நான் காரை பன்பலையை திறந்த வேளையில்.. நிகழ்ச்சி தொகுப்பாளர் இந்த நீதிக் கதையை சொல்லிக் கொண்டிருந்தார்...

தேனியிடம் ஒரு பறவை'நீ காடு மலைகள் என சுற்றித் திரிந்து பல வகைப் பூக்களிடமிருந்து சேகரித்து வந்து அடையில் கட்டிவைத்திருக்கும் தேனை மனிதர்கள் சர்வ சாதாரனமாக கவர்ந்து சென்று சாப்பிட்டு விடுகிறார்களே.. இது உனக்கு வருத்தத்தை தரவில்லையா..,?'என கேட்டதாம்.

அதற்கு தேனி' இம் மனிதர்கள் எடுத்து செல்வது நான் சேகரித்த தேனை மட்டும் தான்.. தேன் சேகரிக்கும் என் திறமையை அல்ல..! இதற்காக நான் ஏன் வருத்தப்பட வேண்டும்..?'; என்பதாக பதிலளித்ததாம்.

ஆம்.. தேனீயின் இந்த தன்மை எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
நமது தகவல்களைத் திருடுகிறார்களே.. என்று நாம் வருந்த வேண்டாம்.
அவர்கள் நமது தகவல்களை மட்டுமே திருடுகின்றனர்.நம்மிடமிருக்கும் வாசிப்பு,ஆய்வு போன்ற இறைவன் நமக்கு வழங்கிய திறமைகளை அத்தகையவர்களால் திருட முடியாது.

நம் தகவல்கள் அவர்களின் சிந்தையில் தேனாய் இனித்திருக்கிறது.. தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறட்டும் என்று அவர்கள் மற்றவர்களுக்கும் பரப்பியிருக்கிறார்கள்.. என்பதாக இதனை எடுத்துக் கொள்வோம்.

நிறைய தேடுவோம்... இரையைத் தேடும் பறவைகளைப் போல.. விதையாய் மண்ணில் வீழ்வோம்.. விரூட்சமாய் எழுவோம்.. நிழல் தருவோம்...!

நம் சிந்தனைகளை இறைவன் நல்வழிப் படுத்துவானாக... ஆமீன்.


கொள்ளுமேடு ரிஃபாயி

Saturday, February 16, 2013

விஸ்வரூபம் : விஷமத் தனத்தின் சூத்திரதாரி யார்..?


3:54

மது,ஆபாசம்,வன்முறை,முறைகேடுகள் உள்ளிட்ட சமூகத் தீமைகளை சந்தைப்படுத்தும் களமாக மாறிவிட்டதால்.. திரைப்படங்களை.. அதிலும் குறிப்பாக இந்திய திரைப்படங்களைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் இருந்து வருகிறேன்.

சமீப நாள்களாக அகில இந்திய அளவிலும் உலகளாவிய தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தி கடந்த ஒரு மாதத்தில் மீடியாக்களின் பரபரப்பு வியாபாரத்துக்கு தீனி போட்டு வந்த கமலஹாசனின் விஸவரூபம் திரைப்படம் தற்போது திரைக்கு வந்திருக்கிறது.

பொதுவாகவே உலகளாவிய அளவில் திரைப்படம்,தொலைக்காட்சி,அச்சு,
இணையதள ஊடகங்கள் கடந்த 20 ஆண்டுகளாகவே இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்சிப் படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

காசுக்காகவும்,மக்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்ப்பதற்காகவும் விஜயகாந்த்அர்ஜுன் போன்ற நடிகர்கள் தேசபக்திப் படங்கள் என்ற போர்வையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தமிழ் பேச வைத்து காசு பார்த்ததை யாரும் பெரிய விஷயமாக கருதவில்லை.

உலகநாயகன் என்ற அடைமொழியோடு திரைத்துறையில் உலாவரும் ஒரு நடிகர், இன்று வரை தமது நிறைவேறாத கனவாக இருந்து வரும் ஆஸ்கர் விருதுக்காக உலகின் சாட்டாம் பிள்ளையாக திகழும் அமெரிக்காவின் போர் வெறியை நியாயப்படுத்தும் வகையிலும்,தம் மண்ணை மீட்க போராடும் ஆப்கானிஸ்தான் போராளிகளின் விடுதலைப் போராட்டத்துக்கு பயங்கரவாத சாயம் பூசி அதனை இஸ்லாத்துடன் இணைத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முயன்றுள்ளார்.

எங்கேயோ இருக்கும் ஆப்கானிஸ்தான் பற்றி படமெடுக்க துனிந்த இந்த உலக நாயகன்.. தமிழகத்துக்கு மிக அருகில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் ஈழத் தமிழர்களின் அவலங்களையும்,சிங்களவன் செய்யும் அட்டூழியங்ளையும் பற்றி இது வரை படமெடுக்காததன் மர்மம் என்னவோ.. யாமறியேன்.

சரி விஷயத்துக்கு வருவோம்..ஒரு வழியாக பல்வேறு காட்சிகள் வெட்டி எறியப்பட்டு திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தை நானும் பார்த்தேன்.நான் பார்த்தது 24 அமைப்பக்களும் சேர்ந்து முதன் முறையாக படம் பார்த்தார்களே... அந்த வெட்டப்படாத பிரிண்டாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

(அப்படியென்றால்.. எங்கே பார்த்தாய்..? உனக்கு வெட்டப்படாத காட்சிகளுடன் கூடிய அந்த பிரிண்ட் எவ்வாறு கிடைத்தது என்றெல்லாம் குறுக்கு விசாரனைகள் செய்யாதீர்கள்.. நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது)

ஓட்டுமொத்தமாகவே திரைப்படங்கள் பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் இல்லாத காரணத்தால்... கமல் புகுத்தியிருப்பதாக கூறப்படும் உலகத் தரம் பற்றியோ,உள்ளூர் தரம் பற்றியோ எனக்கு தெரியாது.

ஆனால் விஸ்வரூபம் பார்த்த பின்பு எனக்கு கமலின் இஸ்லாமிய இழிவு படுத்தல்களின் பின்னணியில் யாரோ ஒரு கருப்பு ஆடு நம் சமுதாயத்தில் இருந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாக புரிந்தது.

இழிவுபடுத்தல்களின் உச்சகட்டமாக வரும் காட்சிகளில் சிலவற்றில்..

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா' என்ற பிரபலமான பிரார்த்தனை வசனங்களை அட்சரம்பிசகாமல் கமல் உச்சரிக்கிறார்...

பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு முன், ஒரு முதவ்வா (இஸ்லாமிய அறிஞர்) முன்தாக ; சொற்பொழிவுகள் தொடங்கப்படும் போது அரபியில் சொல்லப்படும் ஹம்து-ஸலவாத்து எனப்படும் அல்லாஹ்வையும் நபிகளாரையும் புகழும் அரபி வாசகங்களைக் கூறி..

3:182



இதற்கு காரணம் முன்னமேயே உங்கள் கைகள் செய்து அனுப்பிய கெட்ட செயல்களேயாகும்;. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநீதியும் செய்பவனல்லன்     (3:182

ஆகிய வசனங்களை ஓதிய பின்னர் அவரை தூக்கிலிட்டு அல்லாஹுஅக்பர் என்பதாக தக்பீர் முழங்கி தொங்கும் சடலத்தை நோக்கி தமது கரங்களில் தூக்கிப் பிடித்திருக்கும் துப்பாக்கியால் சுடுகின்றனர்

தமது தலையில் முடியை மழித்து..பின்னர் தமது மர்மஸ்தான முடிகளையும் களைந்த பின்னர் தான் நாசவேலையை செய்வதற்கு ஓர்; ஜிஹாதி தயாராவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னணி இசையில் கூட துவேஷம் கலக்கப்பட்டுள்ளது... அராபிய இசையைக் கலந்து சலவாத் எனப்படும் நபிகளாரைப் புகழும் அரபு வாசகங்களை அரபு நாடுகளில் பாடல்களாக ஒலிக்கப்படுவதை அங்கே சென்று வந்த முஸ்லிம்களுக்கு நன்றாக தெரியும்.இந்தப் படத்தில் தீவிரவாதிகள் நாசவேலை செய்வதாக காண்பிக்கும் வேளையிலும்,தீவிரவாதிகளை எண்கௌன்டர் செய்யும் போதும்,இறுதியாக கமலின் படுக்கையறைக் காட்சியிலும் அந்த இசையை பின்னணியாக சேர்த்துள்ளனர்.

இது போன்ற திருக்குர்ஆன் வசனங்கள், காட்சிகள் போன்ற இஸ்லாமியர்களுக்கு கூட தெரியாத சில விஷயங்களை துவேஷத்துடன் காட்சிப்படுத்த கமலால் மட்டும் முடியக் கூடிய காரியமல்ல... மார்க்கம் கற்றறிந்த ஒருவரின் துணையின்றி கமல் இவற்றை செய்திருக்க வாய்ப்பே இல்லை.


நயவஞ்சகர்களின் அட்டூழியங்ளை நபிகளார் காலத்திலிருந்தே இஸ்லாம் எதிர்கொண்டு வருவதை வரலாறு நெடுகிலும் நம்மால் காண முடிகிறது.

திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்;. தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.   (3:54)

Sunday, January 27, 2013

தி மெஸேஜ்.... திரைப்படம்.

நேற்று எனது கணிணியின் டவுன்லோடு போல்டரை நான் துழாவிக் கொண்டிருந்த வேளையில் என் பார்வையில் பட்டது 'தி மெஸெஜ்'என்கிற ஆங்கில திரைப்படம்.முழு திரைப்படத்தில் பாதியளவு மாத்திரமே எனது கணிணியில் பதிவாகி இருந்தது.இதனை இரண்டு தடவை பார்த்தேன்.

இறைத்தூதர் நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பேசக்கூடிய வகையில்1976 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் ஜோர்டான் நாட்டை சேர்ந்த முஸ்தபா அக்காத் என்பவரால் இயக்கி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.(இவர் தான் லிபியா புரட்சியாளர் உமர் முக்தார் பற்றிய படமான லயன் ஆஃப் தி டெஸ்ஸர்ட் என்ற படத்தையும் இயக்கியவர்)

ஹெராக்கிளியஸ் மன்னன்,அலெக்ஸாண்டிரியாவின் பேரரசன் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு நபியவர்கள் அனுப்பிய இஸ்லாமிய அழைப்பு செய்திகளுடன் இப்படம் தொடங்குகிறது.அபிசீனியா மற்றும் மதீனாவுக்கு முஸ்லிம்கள் ஹிஜ்ரத் சென்றது,மதினா வாசிகளோடு நபியவர்கள் செய்து கொண்ட பிரபல அகபா ஒப்பந்தம்,மதினாவிற்குள் நபியவர்கள் முதன்முதலாக நுழைந்த வேளையில் அங்கே அவர்களுக்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு,மஸ்ஜிதுந் நபவியின் கட்டுமானம்,பிலால் (ரலி)அவர்கள் முதன் முதலில் (பாங்கு) தொழுகை அழைப்பு விடுத்தது உள்ளிட்ட முக்கிய சம்பவங்களை காணும் போது நாமும் அக்காலத்தில் வாழ்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

அபு சுப்யான் இவரது மனைவி ஹிந்தா மற்றும் அபு ஜஹ்ல் உள்ளிட்ட மக்கா குறைஷிப் பிரமுகர்களும் ஹம்ஸா (ரலி)ஜாபர் இப்னு அபுதாலிப் (ரலி) ஜைத் (ரலி) பிலால் (ரலி) அம்மார் (ரலி)யாஸிர் (ரலி) சுமைய்யா (ரலி)ஆகிய நபித் தோழர்களும் நபியவர்களின் சிறிய தந்தையான அபு தாலிப் அவர்களும் அழகிய முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். 
 முஸ்லிம்கள் கலிமாவை உச்சரிக்கும் போது எப்போதுமே அரபியில் தான் உச்சரிப்பர்.ஆனால் அந்த கலிமாவையும் அல்லாஹூஅக்பர் என்பன போன்ற முக்கிய அரபி வாசகங்களையும் அரபியிலேயே உச்சரிக்காமல் அதன் பொருளை ஆங்கிலத்தில் கூறுவதாக காட்சிப்படுத்தியது சற்று நெருடலாக இருந்தது.

பொதுவாகவே திரைப்படங்களுக்கு பொழுது போக்கு ஊடகம் என்கிற பெயர் இருந்த போதிலும், கதையை மையப்படுத்தி தான் திரைப்படம் அமைய வேண்டும் என்ற நிலை மாறி ஹீரோக்களுக்காகவே கதைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலையில்,இன்று ஹீரோயிஸத்தை சந்தைப்படுத்தும் சாதனமாக சினிமா மாறிவிட்டது.இந்திய சினிமா முதல் ஹாலிவுட் வரை இதே நிலை தான்.

இத்தகைய பிற்போக்குத் தனங்களுக்கு ஆட்படாமல்,முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையை சுற்றியே இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்த போதிலும் கதையின் நாயகர் நபிகளார் ஒரு இடத்தில் கூட நேரடியாகவோ அல்லது நிழலாகவோ காட்சிப் படுத்தப் படவில்லை என்பது சினிமா துறையில் ஓர் அதிசய நிகழ்வாக இப்படம் அமைந்துள்ளது.

முழு படத்தையும் பார்க்காமல், இத்திரைப்படத்தில் எந்த காட்சிகளும் மிகைப்படுத்தப்படவில்லை இயல்பாக அமைந்திருக்கிறது என்பதாக என்னால் நற்சான்றிதழ் வழங்க முடியாது.ஆயினும்..இது போன்ற படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடும் முயற்சியில் தாஃவா பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்போர் முன் வரவேண்டும் என்பது எனது விருப்பமாகும்.