(பேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்ட,அதிக நபர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட எனது பதிவு...)
வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கோடை
விடுமுறையை குடும்பத்தோடு உல்லாசமாக கழிக்க தாயகம் நோக்கி செல்லும் காலம்
இது.... அவ்வாறு செல்பவர்கள் தங்களது அன்புக்குரியவர்களுக்கு ஆசையாசையாய்
வாங்கி செல்லும் பொருள் தங்க நகை.விமானத்தில் சிலமணி நேரங்கள் பயணித்து
தாயகத்தில் தரை இறங்கிய உடன் விமான நிலையத்தில் இமிக்கிரேசன் சோதனைகளை
முடித்து,தங்களது உடமைகளை கையில் வைத்துக் கொண்டு "சுங்கத் துறை"
சோதனைக்காக அந்த பிரிவிற்கு சென்றால்... அங்கே அந்த அதிகாரிகள் வரி கேட்டு
"அபாய சங்கு"அடிக்கின்றனறாம்.
எதற்காக கேட்கிறார்கள் வரி..?
பயணிகள் தங்களது உறவுகளுக்காக வாங்கி சென்ற தங்க நகைகளுக்காக.கோடிக்கணக்கான
ரூபாய் பெருமானமுள்ள நகைக்காக வரி கேட்கிறார்கள் என்றால் அது நியாயம்
தான்... வெறுமனே இந்திய மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்க்கு அதிக மதிப்புள்ள
தங்க நகையினை கொண்டு சென்றாலே சுங்க வரி செலுத்தியே ஆகவேண்டுமாம்...!
கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தான் இத்தகைய
"அக்கப்போர்கள்" நடைபெறுவதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி
இருக்கின்றன.வெளிநாடு வாழ் இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு தெரியாத இந்த
வரி விதிப்பு முறை பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது துபையிலிருந்து
வெளிவரும் ஆங்கில நாளேடு கலிஸ் டைம்ஸ்.
இந்த சுங்கவரி 1960
ஆம் ஆண்டில் சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கிறது.அதன் படி
வெளிநாடுகளில் வசிக்கும் ஒரு இந்திய ஆண்,அதிகப்பட்சமாக இந்திய மதிப்பில்
ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளையும்,ஒரு இந்திய பெண் ரூ.20 ஆயிரம்
மதிப்புள்ள தங்க நகைகளை மாத்திரமே இந்தியாவிற்குள் எந்த வரி
சமாச்சாரங்களும் இல்லாமல் கொண்டு வர முடியும்.அங்கீகரிக்கப்பட்ட இந்த உச்ச வரம்புக்கு அதிகமாக தங்க நகைகளை கொண்டு வருபவர்கள் "சுங்க வரி" கட்டாயம் செலுத்தியே ஆகவேண்டும் என்கிறது அந்த சட்டம்.
பிரச்சனை இங்கே தான் தொடங்குகிறது... 1960 ஆம் ஆண்டு இந்த வரிவிதிப்பு
சட்டம் இயற்றும் வேளையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா...?
வெறும் நாற்பதே ரூபாய் தானாம்...! இந்த கணக்குப் படி அன்றைய தினத்தில்
ரூ.10 ஆயிரத்துக்கு ஒரு ஆண் பயணி சுமார் 250 கிராம் தங்க நகைகளையும்,பெண்
பயணி ரூ.20 ஆயிரத்துக்கு சுமார் 500 கிராம் தங்க நகைகளையும் எந்த வித சுங்க
வரியையும் செலுத்தாமல் கொண்டு வர முடியும்.
இன்றைய தேதியில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில ்
50 ஆண்டுகளாக எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் பின்பற்றப்படும் அதே பழைய
விதிமுறைகளின் படி 10 ஆயிரம் ரூபாய்க்கு வெறும் 3 கிராம் மாத்திரம் ஒரு
ஆணும்,20 ஆயிரம் ரூபாய்க்கு வெறும் 6 கிராம் தங்கத்தை மாத்திரமே இன்று
இந்தியாவுக்குள் சுங்க வரியின்றி கொண்டு வரமுடியும்.இந்த உச்ச வரம்பினை
மீறும் பட்சத்தில் சுங்கவரி கட்டாயம் வசூலித்தே ஆக வேண்டுமென்று
இந்தியாவிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் மத்திய சுங்க
வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளதாம்.
இதனால் தான் கொச்சி விமான
நிலையத்தில் இந்த மாதிரி கெடுபிடிகளை சுங்க வரித்துறையினர் செய்து
வருகின்றனராம்.இது வரை சென்னை,திருச்சி ஆகிய விமான நிலையங்களில் இந்த
மாதிரியான கெடுபிடிகள் நடைபெற்றதாக தகவல் ஏதும் இல்லை என்ற
போதிலும்,நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும்
இக்காலத்தில்,தங்கத்தின் விலையை வைத்து சுங்க வரிக்கான உச்ச வரம்பினை
நிர்ணயிப்பதை தவிர்த்து,கொண்டு வரப்படும் தங்கத்தின் எடையை கணக்கில்
கொண்டு சுங்க வரி விதிப்பதே சரியானதாக இருக்கும். 50 வருடங்களுக்கு முன்
இயற்றப்பட்ட இந்த சட்டத்தின் விதிமுறைகளில் இந்திய அரசு மாற்றங்களை செய்ய
வேண்டுமென்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்பார்கின்றனர்.

No comments:
Post a Comment