Monday, August 27, 2012

வரம்பு மீறல்கள்.... ஒரு பார்வை...!


சமூகத்தில் சீரான வாழ்க்கை முறையை உறுதி செய்வதற்காகத் தான் விதிகளும் வரம்புகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன.கட்டுப்பாடுகளற்ற ஓர் சமூக அமைப்பில் அமைதியான சூழ்நிலையினை எதிர்பார்க்க முடியாது.நாகரீகம் வளர்ந்துள்ளதாக நம்பப்படும் நாடுகளில் "வரம்புகளே இல்லை... எமக்கு வானமே எல்லை...." என்று குடி,கூத்து,கும்மாளம் என்பதாக திரிபவர்களின் வாழ்க்கை பின்னணியை சற்று ஆராய்ந்து பார்த்தால்.. நமக்கு ஒரு உண்மை புலப்படும்.இத்தகையோரின் பிறப்பே வரம்புகளற்ற உறவுகளில் தான் அமைந்திருக்கும்.

வரம்பு மீறல்களின் வரலாறு ஆதி மனிதர் ஆதம்(அலை)
அவர்களிலிருந்து தொடங்குகிறது.இது பற்றி திருக்குர்ஆனில்....
மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம்.இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்.....(அத்தியாயம்:2,வசனம்:35,36)

இதனால் தான் என்னவோ... வரம்பு மீறலென்பது மனித வரலாற்றில் முற்றுப்பெறாத அத்தியாயமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சிறுநீர் கழிக்காதே என்பதாக எழுதப்பட்டிருக்கும் சுவர்களில் தான் நம்மவர்கள் "மூத்திரத்தால் சித்திரம் வரைவர்..!" எச்சில் துப்பாதீர் என்று எழுதப்பட்டிருக்கும் இடங்களுக்கு தான் நம்மவர்கள் "வெற்றிலை பாக்கு,பான்பராக் எச்சில்களால் வர்ணங்கள் பூசுவர்...!"இத்தகைய வரம்பு மீறல்கள் நமது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நிறைந்து காணப்படுகின்றன.

வளர்ச்சியடைந்ததாக நம்பப்படும் நாடுகளில் பொது இடங்களில் எச்சில் துப்புவது,சிறுநீர் கழிப்பது போன்ற செயல்கள் இல்லாவிட்டாலும்,போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது,அடுத்தவர்கள் உரிமைகளில் சர்வசாதாரணமாக தலையிடுவது,பொது இடங்களில் அணிந்தும் அம்மணமாக திரிவது போன்ற அவர்களின் வளர்ச்சிக்கு(?)தகுந்த மாதிரியான வரம்பு மீறல்கள் நடைபெற்று வருகின்றன.

மது பானங்களை விற்பனை செய்து கொண்டே.. குடி குடியை கெடுக்கும் என்பதாக பிரச்சாரம் ஒருபுறம்...! சினிமா,கலை என்ற பெயரில் விழிகளில் திணிக்கப்படும் விபச்சாரம் மறுபுறம்...! இந்த ரீதியில் அரசாங்கங்களே விதிகளை மீறும் போது,"குடி'களின் வரம்பு மீறல்களை தடுக்க முடியாது.

மீறப்படும் வரம்புகளுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டுமென்ற இறையச்ச உணர்வு ஒன்று மட்டுமே சமூகத்தை வரம்புகளுக்குட்பட்டு வழிநடத்தும்.

- கொள்ளுமேடு ரிஃபாயி..

மறைந்த தலைவர் எஸ்.எம்.ஜின்னா அவர்கள் பற்றிய "மக்கள் உரிமை" இதழில் வெளியான எனது கட்டுரை


Saturday, August 18, 2012

வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்டு வரும் தங்க நகைகளுக்கு சுமை தரும் சுங்க வரி.மாற்றம் செய்யுமா இந்திய அரசு..?


 (பேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்ட,அதிக நபர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட எனது பதிவு...) 

வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கோடை விடுமுறையை குடும்பத்தோடு உல்லாசமாக கழிக்க தாயகம் நோக்கி செல்லும் காலம் இது.... அவ்வாறு செல்பவர்கள் தங்களது அன்புக்குரியவர்களுக்கு ஆசையாசையாய் வாங்கி செல்லும் பொருள் தங்க நகை.விமானத்தில் சிலமணி நேரங்கள் பயணித்து தாயகத்தில் தரை இறங்கிய உடன் விமான நிலையத்தில் இமிக்கிரேசன் சோதனைகளை முடித்து,தங்களது உடமைகளை கையில் வைத்துக் கொண்டு "சுங்கத் துறை" சோதனைக்காக அந்த பிரிவிற்கு சென்றால்... அங்கே அந்த அதிகாரிகள் வரி கேட்டு "அபாய சங்கு"அடிக்கின்றனறாம்.

எதற்காக கேட்கிறார்கள் வரி..? பயணிகள் தங்களது உறவுகளுக்காக வாங்கி சென்ற தங்க நகைகளுக்காக.கோடிக்கணக்கான ரூபாய் பெருமானமுள்ள நகைக்காக வரி கேட்கிறார்கள் என்றால் அது நியாயம் தான்... வெறுமனே இந்திய மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்க்கு அதிக மதிப்புள்ள தங்க நகையினை கொண்டு சென்றாலே சுங்க வரி செலுத்தியே ஆகவேண்டுமாம்...!
கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தான் இத்தகைய "அக்கப்போர்கள்" நடைபெறுவதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.வெளிநாடு வாழ் இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு தெரியாத இந்த வரி விதிப்பு முறை பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது துபையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு கலிஸ் டைம்ஸ்.

இந்த சுங்கவரி 1960 ஆம் ஆண்டில் சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கிறது.அதன் படி வெளிநாடுகளில் வசிக்கும் ஒரு இந்திய ஆண்,அதிகப்பட்சமாக இந்திய மதிப்பில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளையும்,ஒரு இந்திய பெண் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை மாத்திரமே இந்தியாவிற்குள் எந்த வரி சமாச்சாரங்களும் இல்லாமல் கொண்டு வர முடியும்.அங்கீகரிக்கப்பட்ட இந்த உச்ச வரம்புக்கு அதிகமாக தங்க நகைகளை கொண்டு வருபவர்கள் "சுங்க வரி" கட்டாயம் செலுத்தியே ஆகவேண்டும் என்கிறது அந்த சட்டம்.
பிரச்சனை இங்கே தான் தொடங்குகிறது... 1960 ஆம் ஆண்டு இந்த வரிவிதிப்பு சட்டம் இயற்றும் வேளையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா...? வெறும் நாற்பதே ரூபாய் தானாம்...! இந்த கணக்குப் படி அன்றைய தினத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு ஒரு ஆண் பயணி சுமார் 250 கிராம் தங்க நகைகளையும்,பெண் பயணி ரூ.20 ஆயிரத்துக்கு சுமார் 500 கிராம் தங்க நகைகளையும் எந்த வித சுங்க வரியையும் செலுத்தாமல் கொண்டு வர முடியும்.

இன்றைய தேதியில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் 50 ஆண்டுகளாக எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் பின்பற்றப்படும் அதே பழைய விதிமுறைகளின் படி 10 ஆயிரம் ரூபாய்க்கு வெறும் 3 கிராம் மாத்திரம் ஒரு ஆணும்,20 ஆயிரம் ரூபாய்க்கு வெறும் 6 கிராம் தங்கத்தை மாத்திரமே இன்று இந்தியாவுக்குள் சுங்க வரியின்றி கொண்டு வரமுடியும்.இந்த உச்ச வரம்பினை மீறும் பட்சத்தில் சுங்கவரி கட்டாயம் வசூலித்தே ஆக வேண்டுமென்று இந்தியாவிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் மத்திய சுங்க வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளதாம்.

இதனால் தான் கொச்சி விமான நிலையத்தில் இந்த மாதிரி கெடுபிடிகளை சுங்க வரித்துறையினர் செய்து வருகின்றனராம்.இது வரை சென்னை,திருச்சி ஆகிய விமான நிலையங்களில் இந்த மாதிரியான கெடுபிடிகள் நடைபெற்றதாக தகவல் ஏதும் இல்லை என்ற போதிலும்,நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் இக்காலத்தில்,தங்கத்தின் விலையை வைத்து சுங்க வரிக்கான உச்ச வரம்பினை நிர்ணயிப்பதை தவிர்த்து,கொண்டு வரப்படும் தங்கத்தின் எடையை கணக்கில் கொண்டு சுங்க வரி விதிப்பதே சரியானதாக இருக்கும். 50 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்ட இந்த சட்டத்தின் விதிமுறைகளில் இந்திய அரசு மாற்றங்களை செய்ய வேண்டுமென்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்பார்கின்றனர்.

Friday, August 17, 2012

இப்தார் பார்ட்டி

புனித ரமலான் மாதத்தில் அதிகாலையிலிருந்து உண்ணாமல் பருகாமல் நோன்பிருந்த நோன்பாளிகள் தான் மாலை அந்தி சாயும் வேளையில் நோன்பு திறப்பார்கள்.ஆனால்.. நோன்பே வைக்காமல் "இப்தார்"நிகழ்ச்சி என்ற பெயரில் அரசியல் நடத்தும் ஒரு கேவலமான போக்கு நமது நாட்டில் மாத்திரம் தான் நடைமுறையில் இருப்பதாக எனக்கு தெரிகிறது. இந்த மக்கு மோகன் சிங் மாதிரியான ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் உலக வங்கியின் சொம்பு தூக்கிகளுக்கு "இப்தார் பார்ட்டி" கொடுக்கும் சில இஸ்லாமிய பெயர்தாங்கிகள்,மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கவர்களாவர்.
 முஸ்லிம்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அத்வானிக்கு "இப்தார் பார்டியாம்"

Wednesday, August 15, 2012

சுதந்திரத்தை பெற்று "விட்டோம்....!"

 
அந்நியர்களின் ஆதிக்கத்திலிருந்து எமது மண்ணை மீட்க பல்வேறு தியாகங்களை புரிந்து நம் முன்னோர்கள் "சுதந்திர இந்தியாவை"உருவாக்கினர்.மக்களால் உருவாக்கப்பட்ட இந்த தேசம் இன்றைக்கு "மக்களின் தேசமாக இருக்கிறதா..?"

*அம்பானிகளும்,மல்லையாக்களும் வாழும் நம் நாட்டில் தான் பட்டினி சாவுகளும் நடக்கிறது...!

*விவசாய நிலங்கள்... ரியல் எஸ்டேட் முதலைகளின் "கருவூலங்களாக"மாறி விட்டது...!

*நமது தொழில்,எஞ்சியிருக்கும் விவசாயம் அனைத்தும் அந்நிய மயமாகிக் கொண்டிருக்கின்றது....!

*தேசத்தின் உணவுக் கிடங்குகளில் உணவு தானியங்கள் கெட்டுப் போய்க்கொண்டிருக்கின்றன....!

*கல்வி வணிகமயமாகி விட்டது......!

*மேட்டுக் குடிகளுக்கு ஒரு நீதி.... அடித்தட்டு மக்களுக்கு இன்னொரு நீதி....!

*லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை....!

*சாதி-மதவெறி ஊட்டி வளர்க்கப்படுகிறது....!

*சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது....!

*கொலை,கொள்ளை,கற்பழிப்பு போன்றவை அன்றாட செய்திகளாகி விட்டது...!

இவ்வாறாக சாமானிய மக்கள் வாழ்வதற்க்கே வழி இல்லாத நிலையில் இருக்கும் இந்த தேசத்தை என்னால் "சுதந்திர இந்தியா"என்று ஒப்புக் கொள்ள முடியாது.

இந்த தேசத்தில் அதிகார வர்க்கத்திடம் மாத்திரமே சுதந்திரம் ஒட்டு மொத்தமாக குவிந்து கிடக்கிறது.சாமானியர்கள் இன்னும் அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தனியொரு மனிதனும் சந்தோசமாக வாழும் நிலை உருவாகும் வரைக்கும் மீண்டுமொரு "சுதந்திரப் போரை"தொடர்ந்து நடத்திடுவோம்...