முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் திருட்டு சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. நம் தளங்களிலிருந்து திரட்டிய தகவல்களை.. அவற்றை தாம் ஆய்வு செய்து பதிந்தது போல வெளியிடக் கூடி பலரின் செயல்களைக் கண்டு சில நேரங்களில் ஏன் இந்த மாதிரி செய்கிறார்கள்..? என்று நினைத்ததுண்டு.
இன்றிலிருந்து அந்த மாதிரியான எண்ணங்களுக்கு என் மனதிலிருந்து விடை கொடுக்க வேண்டும் என்று எனக்குள் தீர்மானித்துள்ளேன்.
ஏன் என்னுள் இந்த மனமாற்றம்.?
இன்று காலை தொழுகைக்கு பின் என் வீட்டின் மொட்டை மாடியில்,தோட்டத்திலிருந்து நெடு நெடுவென வளர்ச்சி பெற்று மாடியின் பின் புறத்தில் அழகான பந்தலைப் போல கிளைப் பரப்பியிருக்கும் தென்னை,மா மரங்களின் நிழலில் அமர்ந்து எனது சிந்தை கவர்ந்த காரைக்கால் எஃப்.எம்.ரேடியோவை கேட்க தொடங்கினேன்.
நீண்ட நாள்களுக்கு பிறகு நான் காரை பன்பலையை திறந்த வேளையில்.. நிகழ்ச்சி தொகுப்பாளர் இந்த நீதிக் கதையை சொல்லிக் கொண்டிருந்தார்...
தேனியிடம் ஒரு பறவை'நீ காடு மலைகள் என சுற்றித் திரிந்து பல வகைப் பூக்களிடமிருந்து சேகரித்து வந்து அடையில் கட்டிவைத்திருக்கும் தேனை மனிதர்கள் சர்வ சாதாரனமாக கவர்ந்து சென்று சாப்பிட்டு விடுகிறார்களே.. இது உனக்கு வருத்தத்தை தரவில்லையா..,?'என கேட்டதாம்.
அதற்கு தேனி' இம் மனிதர்கள் எடுத்து செல்வது நான் சேகரித்த தேனை மட்டும் தான்.. தேன் சேகரிக்கும் என் திறமையை அல்ல..! இதற்காக நான் ஏன் வருத்தப்பட வேண்டும்..?'; என்பதாக பதிலளித்ததாம்.
ஆம்.. தேனீயின் இந்த தன்மை எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
நமது தகவல்களைத் திருடுகிறார்களே.. என்று நாம் வருந்த வேண்டாம்.
அவர்கள் நமது தகவல்களை மட்டுமே திருடுகின்றனர்.நம்மிடமிருக்கும் வாசிப்பு,ஆய்வு போன்ற இறைவன் நமக்கு வழங்கிய திறமைகளை அத்தகையவர்களால் திருட முடியாது.
நம் தகவல்கள் அவர்களின் சிந்தையில் தேனாய் இனித்திருக்கிறது.. தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறட்டும் என்று அவர்கள் மற்றவர்களுக்கும் பரப்பியிருக்கிறார்கள்.. என்பதாக இதனை எடுத்துக் கொள்வோம்.
நிறைய தேடுவோம்... இரையைத் தேடும் பறவைகளைப் போல.. விதையாய் மண்ணில் வீழ்வோம்.. விரூட்சமாய் எழுவோம்.. நிழல் தருவோம்...!
நம் சிந்தனைகளை இறைவன் நல்வழிப் படுத்துவானாக... ஆமீன்.
கொள்ளுமேடு ரிஃபாயி

நல்லதொரு நீதிக் கதையை பகிர்ந்தீர்கள். இறைவன் நமக்கு வழங்கிய திறமைகளை யாராலும் திருட முடியாது. மிக உண்மை...
ReplyDelete