Sunday, January 27, 2013

தி மெஸேஜ்.... திரைப்படம்.

நேற்று எனது கணிணியின் டவுன்லோடு போல்டரை நான் துழாவிக் கொண்டிருந்த வேளையில் என் பார்வையில் பட்டது 'தி மெஸெஜ்'என்கிற ஆங்கில திரைப்படம்.முழு திரைப்படத்தில் பாதியளவு மாத்திரமே எனது கணிணியில் பதிவாகி இருந்தது.இதனை இரண்டு தடவை பார்த்தேன்.

இறைத்தூதர் நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பேசக்கூடிய வகையில்1976 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் ஜோர்டான் நாட்டை சேர்ந்த முஸ்தபா அக்காத் என்பவரால் இயக்கி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.(இவர் தான் லிபியா புரட்சியாளர் உமர் முக்தார் பற்றிய படமான லயன் ஆஃப் தி டெஸ்ஸர்ட் என்ற படத்தையும் இயக்கியவர்)

ஹெராக்கிளியஸ் மன்னன்,அலெக்ஸாண்டிரியாவின் பேரரசன் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு நபியவர்கள் அனுப்பிய இஸ்லாமிய அழைப்பு செய்திகளுடன் இப்படம் தொடங்குகிறது.அபிசீனியா மற்றும் மதீனாவுக்கு முஸ்லிம்கள் ஹிஜ்ரத் சென்றது,மதினா வாசிகளோடு நபியவர்கள் செய்து கொண்ட பிரபல அகபா ஒப்பந்தம்,மதினாவிற்குள் நபியவர்கள் முதன்முதலாக நுழைந்த வேளையில் அங்கே அவர்களுக்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு,மஸ்ஜிதுந் நபவியின் கட்டுமானம்,பிலால் (ரலி)அவர்கள் முதன் முதலில் (பாங்கு) தொழுகை அழைப்பு விடுத்தது உள்ளிட்ட முக்கிய சம்பவங்களை காணும் போது நாமும் அக்காலத்தில் வாழ்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

அபு சுப்யான் இவரது மனைவி ஹிந்தா மற்றும் அபு ஜஹ்ல் உள்ளிட்ட மக்கா குறைஷிப் பிரமுகர்களும் ஹம்ஸா (ரலி)ஜாபர் இப்னு அபுதாலிப் (ரலி) ஜைத் (ரலி) பிலால் (ரலி) அம்மார் (ரலி)யாஸிர் (ரலி) சுமைய்யா (ரலி)ஆகிய நபித் தோழர்களும் நபியவர்களின் சிறிய தந்தையான அபு தாலிப் அவர்களும் அழகிய முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். 
 முஸ்லிம்கள் கலிமாவை உச்சரிக்கும் போது எப்போதுமே அரபியில் தான் உச்சரிப்பர்.ஆனால் அந்த கலிமாவையும் அல்லாஹூஅக்பர் என்பன போன்ற முக்கிய அரபி வாசகங்களையும் அரபியிலேயே உச்சரிக்காமல் அதன் பொருளை ஆங்கிலத்தில் கூறுவதாக காட்சிப்படுத்தியது சற்று நெருடலாக இருந்தது.

பொதுவாகவே திரைப்படங்களுக்கு பொழுது போக்கு ஊடகம் என்கிற பெயர் இருந்த போதிலும், கதையை மையப்படுத்தி தான் திரைப்படம் அமைய வேண்டும் என்ற நிலை மாறி ஹீரோக்களுக்காகவே கதைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலையில்,இன்று ஹீரோயிஸத்தை சந்தைப்படுத்தும் சாதனமாக சினிமா மாறிவிட்டது.இந்திய சினிமா முதல் ஹாலிவுட் வரை இதே நிலை தான்.

இத்தகைய பிற்போக்குத் தனங்களுக்கு ஆட்படாமல்,முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையை சுற்றியே இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்த போதிலும் கதையின் நாயகர் நபிகளார் ஒரு இடத்தில் கூட நேரடியாகவோ அல்லது நிழலாகவோ காட்சிப் படுத்தப் படவில்லை என்பது சினிமா துறையில் ஓர் அதிசய நிகழ்வாக இப்படம் அமைந்துள்ளது.

முழு படத்தையும் பார்க்காமல், இத்திரைப்படத்தில் எந்த காட்சிகளும் மிகைப்படுத்தப்படவில்லை இயல்பாக அமைந்திருக்கிறது என்பதாக என்னால் நற்சான்றிதழ் வழங்க முடியாது.ஆயினும்..இது போன்ற படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடும் முயற்சியில் தாஃவா பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்போர் முன் வரவேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

No comments:

Post a Comment